Sunday, June 10, 2012

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம் சமுதாயத்தின் அவலத்தை அப்படியே கட்டுரையாக வரைந்துள்ளேன் சகோதர, சகோதரிகள் கட்டாயம் படித்து தங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்! 

 குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் 
பெற்றோரின் வருமானத்தில் நம் நிலை
பிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும் தந்தையின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டும் பற்களை இழித்துக் காட்டி பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டிருப்போம். இந்த பருவத்தில் நமக்கு பொருளாசையோ, பொன்னாசையோ, சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ளும் எண்ணமோ வருவதில்லை!
வளரும் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் பாடம் படிக்க வேண்டும் வீட்டுப்பாடம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தான் நமக்கு அதிகமாக வரும், ஏன்! ஒரு நோட்டு புத்தகம் வாங்குவதாக இருந்தாலும் தந்தையின் வருமானத்தை எதிர் நோக்கித்தான் இருப்போம், நம்முடைய பள்ளித் தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு கூட நமக்கு மாணவப் பருவத்தில் வழி இருக்காது இந்த பருவத்தில் குடும்ப சொத்தை அபகரிக்கும் எண்ணம் நம் மனதில் துளியளவும் வருவதில்லை!
குழந்தைபருவமும் குடும்ப பாசமும்
நாம் அனைவரும் குழந்தையாக இருக்கும்போது அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தை கொட்டி வாழ்ந்திருப்போம்!
  •  அப்பா 2 சாக்லெட் வாங்கிக்கொடுப்பார் ஆனால் நமக்கோ உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் வாயில் இருக்கும் சாக்லெட்டை பிடிங்கி சாப்பிடுவது சுகமாக இருக்கும்.
  • சாக்லெட்டை பரிகொடுத்த சகோதரனோ அடிக்க ஓடி வருவான் நாமோ அன்புத் தாயிடம் சென்று ஒட்டிக் கொள்வோம் அருகே இருக்கும் குட்டிச் சகோதரிகளோ இவைகளைப் பார்த்து சிரித்துக்கொண்டு துள்ளிக்குதிக்கும்! குடும்பம் குதூகலமாக இருக்கும்! 
  • வீட்டில் தாய் மீன் சமைத்திருப்பாள், மீனை ருசித்துக் கொண்டிருக்கும் போது அதன் முள் நம் வாயில் சிக்கிக் கொள்ளும் உடனே தந்தை பற்களில் சிக்கிய முள்ளை அழகாக வெளியே எடுத்துவிடுவார் அருகில் அமர்ந்திருக்கும் தாயோ முள் இல்லாத வண்ணம் மீனை வாயில் ஊட்டிவிடுவாள். 
  • தாய் உணவு ஊட்டிவிடும்போது உங்கள் சகோதரனை பார்த்து ஹி! ஹி!என பழித்து சிரிப்பீர்கள், அவனோ உங்கள் முதுகை தட்டிவிட்டு தலையில் கொட்டு வைத்து ஓடி மகிழ்வான். 
மேற்கண்ட குழந்தைப்பருவ அட்டகாசங்களின் போது பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்! இப்படிப்பட்ட சந்தோஷத்தை தேடிக்கொள்ளுங்கள்!
சுயமாக வருமானம் ஈட்டும் போது நம் நிலை
வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் ஒரு சகோதரன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவான் அதே நேரத்தில் மற்ற சகோதரன் தந்தைக்கு உறுதுணையாக இருந்து சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவான் இந்த நிலையில் அண்ணன் தம்பி பாசத்தில் குறை தென்படாது! இதைக்கண்டு ரசித்த தந்தை உடனே தன் கால்மீது கால்வைத்து தன் மனைவியை நோக்கி நம் குடும்ப பாசத்தை போன்று வேறு எந்த குடும்பத்திலாவது இருக்குமா! என்று புதையல் கிடைத்துவிட்டது போன்று பேசிக்கொள்வார்கள்!
சகோதர உறவில் விரிசல் ஆரம்பம்
சில குடும்பங்களில் மேல்படிப்பு படித்து கவுரவமான உத்தியோகத்தில் ஒரு சகோதரன் அமர்ந்துக்கொள்வான் உடனே தன்னலம் பார்க்க ஆரம்பிப்பான். குடும்பத்தை கவனிக்காமல் மாதசம்பளப் பணத்தை தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் சேமிக்க ஆரம்பிப்பான். தந்தையோ படிக்காத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் படித்தவனோ ஏன் அந்த அடிமுட்டாள் என்னைப் போன்று படிக்கவில்லை? என்று கேள்வி கேட்ட தந்தையை மடக்குவான் இதைக் கேள்விப்படும் படிக்காத சகோதரனோ அவன் படிக்க நான் கஷ்டப்பட்டேனே அவனிடம் இவ்வாறு ஏமாந்தது போனேனே! என கண்கலங்கி நிற்பான்! 
சில குடும்பங்களில் மேல் படிப்பு படித்து வேலைகிடைக்காத நிலையில் படித்த சகோதரன் எதிர்காலத்தை எண்ணி கண்கலங்கி நிற்பான் ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தி சுயதொழிலில் இலாபம் கண்ட சகோதரனிடமோ வருமானம் தங்க காசுகளா கவும், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்களும் தன் பீரோ பெட்டியில் இருக்கும் குடும்பத்தில் யாரையும் நம்பமாட்டான் பீரோ சாவியும் தன்னிடமே வைத்துக்கொள்வான்! தந்தையோ படித்து வேலையில்லாத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் புது முதலாளியான சகோதரனோ பட்டம் படித்து வேலையில்லாத சகோதரன் நம் தொழிலுக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்று எண்ணி பட்டதாரிக்கு  வேலை இல்லையாம்! எதற்காக படித்து கிழித்தானாம் என்று மற்றவர் முன் கிண்டல் அடித்து மனதை நோகடிப்பான். இதை பிறர் மூலம் கேள்விப்பட்ட வேலையில்லா பட்டதாரியோ என் சகோதரனே வேலை கொடுக்க மறுக்கிறான் என்று கண்கலங்கி நிற்பான்!
 இரு குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரின் நிலையோ மிகவும் பரிதாபமாக காணப்படும் அவர்கள் வாயடைத்துப்போய் எந்த பிள்ளைக்கும் அறிவுரை கூற முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
திருமணமும் உறவில் விரிசலும்
சில குடும்பங்களில் அண்ணன் உழைக்கத் தெரியாத ஏழையாக இருப்பான் தம்பியோ தொழிலில் மாபெரும் திறமைசாலியாக இருப்பான் இப்படிப்பட்ட நிலையில் தம்பி தன் திருமணத்திற்கு முந்திக்கொள்வான் அண்ணனோ வருமையின் காரணமாக தன் திருமணத்தை தள்ளிப்போடுவான்! இறுதியாக தம்பியின் மகனை மார்பில் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு தன் நிலையை வெளியே வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் நீர் சொறிய சிரித்துக் கொண்டிருப்பான்!
 சில குடும்பங்களில் தம்பி ஏழையாக இருப்பான் வசதியான அண்ணன் தன்னுடைய திருமணத்தை முடித்துக்கொண்டு தம்பியின் திருமணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்க மாட்டான். தம்பியோ தன் வருமைக்கு பயந்து திருமணத்தை தள்ளிப்போடுவான்! இறுதியாக அண்ணனின் மகனை முதுகில் சுமந்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றித்திரிவான் தன் நிலை பற்றி பிறரிடம் வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீருடன் அலைவான்.
 இரண்டு ஏழை சகோதரர்களின் நிலையும் அவர்களின் பெற்றோரின் நிலையும் மிகவும் பார்க்க பரிதாபமாக இருக்கும். இங்கு பெற்ற தாய் தன் ஏழை மகனின் நிலைகண்டு ஆறுதல் கூற வார்த்தையின்றி மனதிற்குள் அழுது துடித்துக் கொண்டிருப்பாள். அவளுக்க ஆறுதல் கூற நாதியிருக்காது நோய்தான் வரும்!
சொத்து பிரிக்கும் போது நம் நிலை
பெற்றோர் வாயை கட்டி, வயிற்றை கட்டி தன் பிள்ளைகளுக்கு சொத்தாக நிலம் மற்றும் வீட்டை வைத்திருப்பார்கள். சொத்து பிரிக்கும் போது - 
  • சுயநலவாதியான சகோதரன் தனக்கு இலாபம் மிகுதியாக உள்ள சாலையின் முன்பக்க சொத்து வேண்டும் என்பான் 
  • பொதுநலவாதியான சகோதரனோ நான் தந்தையுடன் சேர்ந்து படிக்காமல் குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்தவன் எனக்குத்தான் அந்த நிலம் வேண்டும் என்பான்.
 தந்தையும் தாயும் இதைக் காணத்தான் நாம் உயிர்வாழ்கிறோமா? என்று ஒரு மூலையில் அமர்ந்து அழுவார்கள் உடனே இளகிய மனம் கொண்டவன் எனக்கு அல்லாஹ் இருக்கிறான் என்று விட்டுக்கொடுப்பான் இறுதியாக வாதத் திறமை கொண்ட சுய நலவாதி இலாபம் தரும் பகுதியை தட்டிச் சென்றுவிடுவான்! இளகிய மனம் கொண்டவன் ஏமாந்து ஏழையாகிவிடுகிறான்.
 வேடிக்கை நிரம்பிய சகோதர பாசம்
சில குடும்பங்களில் சகோதர பாசம் அளவுக்கதிகமாக இருக்கும் ஒருவன் தன்னைப் பற்றி சிந்திக்கவே மாட்டான் என் சகோதரன் சுகமாக வாழ்ந்தால் போதும்! எனக்கு அல்லாஹ் இருக்கான் ஆகையால் என்னைப் பற்றியோ, என் மனைவி, மக்கள் பற்றியோ எனக்கு சிறிதளவும் கவலை இல்லை என்பான்!
 இவனது குடும்பம் உண்மையில் குறைந்த வருமானத்தில் அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் வருமையில் வாடும் ஆனாலும் கவுரவம் கருதி தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனிடம் சென்று தன் வருமை நிலையை பற்றி பேசக்கூட மாட்டான்! ஆனால் அந்த உடன்பிறந்த சகோதரனின் ஏழ்மை நிலையைக் கண்டும் ஒரு குருடனைப் போன்று பணக்கார சகோதரன் இருப்பான். யாராவது ஒரு நலம் விரும்பி பணக்கார சகோதரனிடம் முறையிட்டல்ஒருமுறை இவனுக்கு பணம் கொடுத்து உதவினால் அடிக்கடி தன்னை அணுகி தொல்லை கொடுப்பான் என்று வாய்கூசாமல் பதில் கூறுவான்!
  பாசம் நிறைந்த ஏமாளி சகோதரனின் மனைவி மக்கள்
சொத்து பிரிக்கும் போது கூட பாசம் நிறைந்த சகோதரன் தன்னுடைய ஏழையான மனைவி மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வசதியான தன் சகோதரன் சுகமாக இருந்தால் போதும் என்று விட்டுக்கொடுப்பான். மனைவி இவனிடம் என் குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கின்றனர் உன் சகோதரனின் பிள்ளைகளோ சுகமாக இருக்கின்றனர் எனவே எவ்வாறு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் இலாபப் பகுதியை விட்டுக் கொடுப்பீர்கள் என்று வம்பு (அன்புச்) சண்டை பிடிப்பாள் ஆனால் இவனோ (பாசம் நிறைந்த சகோதரனோ) மனைவியை நோக்கி உன் வேலையைப் பார்! என் சகோதரன் தான் எனக்கு முக்கியம் அவனிடம சண்டையிட்டால் எனது சகோதர பாசம் போய்விடும் உன் வாயை மூடு உன் அப்பன் வீட்டிலிருந்து எதை கொண்டுவந்தாய் என்று கேள்வி கேட்டு தன் மனைவியை மடக்கிவிடுவான்! 

உடன் பிறந்த சகோதரிகள் இருப்பார்கள் அவர்களில் நேர்மையானவர்களைத் தவிர மற்ற சகோதரிகள் ஏழை சகோதரனின் வீட்டை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் ஆனால் வசதிபடைத்த சகோதரன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்கள்! பாசம் நிறைந்த ஏழை சகோதரன் அப்போதுதான் தான் செய்த தவறை எண்ணிப் பார்ப்பன் தன்னால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதே யாரும் மதிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் காலம் அவனை முந்தியிருக்கும் வேதனையின் உச்ச கட்டத்திற்கு சென்று அவன் இதயம் வலிக்க ஆரம்பிக்கும் இறுதியாக பாசம் நிறைந்த ஏழை சகோதரன் தன் குழந்தைகளையும், அருமை மனைவியையும் ஒருநாள் அநாதையாக விட்டு மரணித்துவிடுவான்! உடன் பிறந்தவர்கள் உற்றார் உறவினர்கள் எலவு வீட்டிற்கு வந்து கத்தம் ஃபாத்திஹா ஓதிவிட்டு சென்று விடுவார்கள்.

இறுதியாக மரணித்த சகோதரனின் குழந்தைகள் தலைதூக்க ஆரம்பிக்கும் வரை தினமும் சாப்பிட சிரமம் வாய்ந்த ரேஷன் கடை அரிசியைத்தான் நம்பி வாழ்வார்கள். மிதமிஞ்சிய சகோதர பாசம் காட்டி மரணித்த ஏழை சகோதரனின் ஏழைக் குழந்தைகள் தன் தகப்பனின் சகோதர சகோதரிகள் மீது வெறுப்பு கொண்டு அவர்களின் வாசல்படியைக்கூட மிதிக்கமாட்டார்கள் ஆனால் வசதிபடைத்தவர்களோ தங்கள் திருமண மற்றும் குடும்ப விஷேசங்களின் போதுசமுதாயம் தவறாக எண்ணிவிடுமோ என்று பயந்து திருமண அல்லது விஷேசத்ததிற்கு முதல் நாள் பத்திரிக்கை வைத்து ஏழையின் வீட்டில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி விடுவார்கள்! (அல்லாஹ் காப்பற்றனும்)

சிந்தித்துப்பாருங்கள்
  •  குழந்தைப் பருவத்தில் (பகுத்தரிவற்ற நிலையில்) சகோதரனின் வாயிலிருந்து சாக்லெட்-ஐ பறித்து சாப்பிட்ட போது இருந்த சுகம் வளர்ந்து பகுத்தரிவு பெற்ற பின் நீடிக்கிறதா? எங்கே போனது உங்கள் பாசம்! 
  • விளையாட்டுப் பருவத்தில் அண்ணனோ தம்பியோ அக்காளோ தங்கையோ சைக்கிள் ஓட்டும்போது பின்னால் அமர்ந்து கடைத்தெருக்களில் சுற்றினீர்களே அந்த சுகம் நீங்கள் தனியாக பைக் ஓட்டும்போதும், கார் ஓட்டும்போதும் கிடைத்ததா? 
  • கல்லூரியின் மர நிழலில் அமர்ந்து படிக்கும் போது உங்கள் படிப்புச் செலவுக்காக உங்கள் சகோதரன் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பட்டறைகளில் ஓடாக தேய்ந்தானே அந்த நன்றி மறந்துவிட்டீர்களா? 
  • உயர் அதிகாரியாக வர ஆசைப்பட்டு உங்கள் சகோதரன் மேல்படிப்பு படித்தும் வேலை கிடைக்காமல் வருமையில் வாடும்போது நீங்கள் அவனுக்கு உதவாமல் சுயதொழில் புரிந்து ஈட்டிய ரூபாய் நோட்டுக்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்களே அல்லாஹ் உங்கள் மீது அன்பு செலுத்துவானா? 
  • உங்கள் வாதத்திறமையால் இலாபம் கொழிக்கும் சொத்தை தவறான வழியில் அடைந்தீர்களே இதுபோன்ற வாதத் திறமையால் அல்லாஹ்விடம் சுவர்கத்தை அடைய முடியுமா? 
  • அளவுக்கதிகமான சகோதர பாசத்தினால் தன் சொந்த மனைவி மக்களை மறந்து இறுதியாக அவர்களை நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் செல்கிறீர்களே ஒவ்வொருவனும் தன் குடும்ப நபர்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்ற நபிமொழி கூட நினைவுக்கு வருவதில்லையா? 
  • உடன் பிறந்த சகோதரிகளில் சிலர் தன் உடன் பிறந்த ஏழை சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விட தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விரும்பு கிறார்களே இது போன்ற சகோதரிகளை மஹ்சரில் அல்லாஹ் பார்ப்பானா? 
  • உங்கள் உடன் பிறந்த சகோதரனையோ, சகோதரியையோ இழந்த அவர்களின் அநாதையான பிள்ளைகளை நேசிக்க தவறுகிறீர்களே நீங்கள் பிறந்தவுடன் உங்கள் தாய் வீதியில் வீசியிருந்தால் உங்கள் வேதனை எப்படி இருந்திருக்கும் சற்று திரும்பிப் பாருங்களேன்!.
குறிப்பு
  • பெற்ற தாய் தந்தையரை நேசியுங்கள்! 
  • உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை நேசியுங்கள்! 
  • கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் நேசியுங்கள் 
  • ஆதரவற்றவர்களையும், அநாதைகளையும், மிஷ்கீன் களையும் நேசியுங்கள்! 
  • தாய்க்காக மனைவியை மறப்பதும், மனைவிக்காக தாயை மறப்பதும், சகோதரனுக்காக சகோதரியை மறப்பதும், சகோதரிக்காக சகோதரனை மறப்பதும் பாவமாகும்! 
  • பணத்தைக்கொண்டும், வாதத்திறமையைக் கொண்டும், பதவிகளைக் கொண்டும் இந்த உலகில் வெற்றி பெறலாம் ஆனால் மஹ்சரின் வெற்றிக்கு உண்மையும், உத்தமமும், நாணயமும், நம்பிக்கையும், ஈமானும் தேவை! 
  • பணத்திற்காக, சொத்து சுகத்திற்காக விலை போகாதீர்கள் 
  • அளவுக்கதிகமான சகோதர பாசத்திற்காக உங்கள் ஏழை மனைவி மற்றும் குழந்தைகளையும் மறந்துவிடாதீர்கள்! அதே நேரம் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அளவுக்கதிகமான பாசம் காட்டி பெற்றோரையும், உடன்பிறப்புகளை உதரித்தள்ளிவிடாதீர்கள்! 
  • நபிகளார் (ஸல்) எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ கற்றுக்கொள்ளுங்கள்! 
  • குர்ஆன் ஹதீஸ்கள் மீது ஈமான் கொள்பவன் அறிந்தே யாரிடமும் ஏமாறக்கூடாது, அதே வேலையில் எக்காரணம் கொண்டும் யாரையும் எதற்காகவும் ஏமாற்றவும் கூடாது! 
நீங்கள் ஒருவரை ஏமாற்றினால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும்! ஆம் பிறரை ஏமாற்றினால் மஹ்சரின் கேள்விக்கணக்கில் நீங்கள் தானே மாட்டிக் கொள்கிறீர்கள் எனவே இப்லிஷிடம் நீங்கள் ஏமாறுகிறீர்களே!
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

Wednesday, March 14, 2012

சொர்க்கம் செல்ல ஆசைப்படுங்கள் ஏன்?

உயிர் அடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய நபராயிருந்தாலும், அவனுடைய புகழோ, செல்வமோ, சந்ததிகளோ எந்த பயனும் அளிக்காது. அவனுடைய உடலை மூட கஃபன் துணி தயாராக இருக்கும். புதை குழியில் வைத்துவிட்டு அனைவரும் போய் விடுவார்கள். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும்.

இறைக்கட்டளைக்கு அடி பணிந்து உண்மை முஸ்லிமாக வாழ்ந்தவன் தக்க பதிலைக் கூறி புது மாப்பிள்ளை போல கியாம நாள்வரை நித்திரையில் மூழ்கிடுவான். இறைக்கட்டளையை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாமல் கப்ரின் வேதையில் மூழ்கி துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.

இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் உதட்டில் கலிமா - உள்ளத்தில் ஹராமாக; கடமைகளை பேணி நடக்காமல், ஃபாத்திஹாக்களை நம்பி திசை மாறி கிடக்கின்றனர். அல்லாஹ், உணவுக்கும், உடைக்கும், இடத்திற்கும் கணக்கு கேட்பதுடன், தவறான செயல்களுக்கும் விசாரணை செய்வான் என்பதை உணர வேண்டும்.

மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் பணம் மட்டுமே. இதன் கேட்டை உணராமல், தன் உயிரின் இரகசியத்தைக் கூட எண்ணிப்பார்க்காமல், உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடை போடுகிறான். இத்தகைய நிராகரிப்பாளர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

"நாம் அவர்களுக்கு செல்வத்தையும், மக்களையும் கொடுத்திருப்பதைப்பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? நாம் அவர்களுக்கு அதிவேகமாக நன்மைகளை வழங்குவதாக நினைத்தார்களா? உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:55)

மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; ''எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்." (அல்குர்ஆன் 8 : 50, 51)

"...அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்." (அல்குர்ஆன் 18 : 29)

'பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ''நீ (இதைச்) சவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்"" (என்று அவர்களிடம் சொல்லப்படும்). (அல்குர்ஆன் 44 : 48-50)

"அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு; கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 40 : 71, 72)

பல தேசங்களை ஆண்ட நம்ரூத் என்பவன் உலகில் நான் சுவர்க்கத்தை உண்டாக்குகிறேன் என்று சவால் விட்டு, ஏராளமான செல்வத்தைக் கொட்டி பெரிய மாளிகைகளை அமைத்தான். ஆனால், அவன் அதில் நுழையும்போதே அவனது உயிரை மலக்குகள் கைப்பற்றிவிட்டனர். அதாவது ஆடம்பரத்தின் ஆணிவேரே பறிக்கப்பட்டு மாண்டுபோனான்.

அதுபோல நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தில், காரூன் என்பவன் பெரும் செல்வந்தனாக கர்வம் கொண்டு அட்டூழியம் புரிந்து வந்தான். சமூக மக்கள் அவனை பெரிய அதிர்ஷ்டசால் என்று கூறினர். ஆனால், அல்லா ஹ்வின் வேதையில் அகப்பட்டு அவனும் இருப்பிடமும் சொத்த்குக்களும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனின் பேரழிவைக் கண்டு "அல்லா ஹ்வின் கருணை இல்லாமலிருந்தால் இவ்வாறே நாமும் அழிந்திருப்போம்" என்று மக்கள் கூறினர்.

உலக வாழ்வின் வெறித்தனமான உவப்பை தடுக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "இப்னு உமரே! நீ காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் மாலை வரை உயிரோடு இருப்பேன் என்று எண்ணாதே! மாலையானால் நான் காலையில் உயிரோடு இருப்பேன் என்று எண்ணாதே! வாழ்வின்போது மரணத்திற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள். நாளை மறுமையில் அல்லா ஹ்விடத்தில் உன் நிலைமை எப்படி இருக்குமோ என்பதை நீ அறிய மாட்டாய்!" என்று அறிவுரை கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் :

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹ_ருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும். (அல்குர்ஆன் 44:51-57)

"...பயபக்தி உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்." (அல்குர்ஆன் 3 : 15)

"அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்." (அல்குர்ஆன் 52 : 20)

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹ_ருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும். (அல்குர்ஆன் 44:51-57)

அதிகம் கேட்கவேண்டிய துவா?
மேலும் அவர்கள் கூறுவார்கள்: "எங்கள் ரட்சகா! ஜஹன்னம் எனும் நரகத்திஉன் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக! நிச்சயமாக அதன் வேதனை தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது. நிச்சயமாக அது நிலையாகத் தங்கியிருப்பதற்கும் சற்று நேரம் தங்குவதற்கும் மிகக் கெட்டதாகவும் இருக்கின்றது."(அல் குர் ஆன் 25: 65, 66)

பிரார்த்தனை தான் வணக்கத்தின் மூளை - சத்து என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுப் பெற வேண்டிய இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இறைவனிடம் கேட்குமாறு நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.

இறைமறையாம் திருக்குர்ஆனிலும் சுமார் 60 க்கும் மேற்பட்ட ''துஆ''க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எந்த பிரார்த்தனையை அதிகமதிகமகக் கேட்க வேண்டும் என்பதற்கு பின்வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒருமுறை துஆச் செய்யும்பொழுது "யா அல்லாஹ் என் கணவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்), தந்தை அபூஸுஃப்யான், சகோதரர் முஆவியா உள்ளிட்ட அனைவரையும் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த செல்வத்துடனும் நல்வாழ்வு வாழச்செய்வாயாக" என்று பிரார்த்திதார்கள். இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உம்மு ஹபீபாவே! அல்லாஹ்வால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட இந்த விஷயங்கள் பற்றிக் கேட்பதைவிட நரகின் வேதனையை விட்டுப் பாதுகாப்புக்கும், பாவமன்னிப்புக்கும் கேட்டால் நன்றாக இருக்கும்" என்று கூறி பிரார்த்தனைகளிலேயே அதிக இடம் பிடிக்க வேண்டிய விஷயம் இதுதான் என்பதை உணர்த்தினார்கள்.

ஏனெனில் அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து அவர்களுக்கு சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அவன் கட்டளையிட்டபோது அதற்குப் பெருமையாக மறுத்துப் பேசிய இப்லீஸிடம் சொன்ன வார்த்தை "உன்னையும் உன்னைப் பின் தொடர்ந்தவர்களையும் கொண்டு ஜஹன்னம் - நரகத்தை நான் நிச்சயம் நிரப்புவேன் (அல்குர்ஆன் 7 : 18) என்பதுதான்.

"மனிதர்களாலும், ஜின்களாலும் ஜஹன்னமை (நரகத்தை) நான் நிரப்புவேன்" என்ற உம் இறைவனின் சொல் பூர்த்தியாகிவிட்டது (அல்குர்ஆன் 12 : 119) போன்ற வசனங்கள் நரகின் கொடிய வேதனையிலிருந்து நாம் பாதுகாப்புத் தேடியவர்களாகவே இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் போதும் மற்ற அனைத்தும் இலேசாகிவிடும். சுவர்க்கத்தை தனியாகக்கேட்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் கேட்கலாம். எனவேதான் ஹஜ்ஜின்போது கேட்க வேண்டிய மிக மிக முக்கியமன ‘துஆ’வாகிய "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா..." எனும் எல்லோரும் அறிந்துள்ள - எப்போதும் கேட்கின்ற ‘துஆ’வில் "இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நல்வாழ்வைத் தா, மறுமையிலும் நல்வாழ்வைக் கொடு! நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று" என்று நாம் கேட்கின்றோம். நரகிலிருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டாலே அப்புறமென்ன நிலையான சொர்க்கம் தானே!

எனவே நமது ‘துஆ’க்களில் மிகவும் அதிகமாக இடம் பிடிக்க வேண்டிய கோரிக்கை "நரகிலிருந்து பாதுகாப்பு" தான். எனவேதான் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஸுப்ஹுக்குப் பிறகும், மஃரிபுக்குப் பிறகும் "அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்" என 7 தடவை கூறி நரகை விட்டுப் பாதுகாக்கக் கோருமாறு பணித்தார்கள்.

‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்).

அல்லாஹ், முஃமீன்களுக்கு வாக்களித்துள்ள அந்த இனிமையான சுவனபதியின் பாக்கியம் நம் அனைவருக்கும் கிட்ட உண்மையான ஈமான்தாரிகளாக நாம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக

Wednesday, March 7, 2012

இஸ்லாமிய திருமணம்

(எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்: உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5)

அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49,)

மணம் முடித்து மகிழுங்கள்:

ஓ மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

(இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்)

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

ரசூல் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:

‘திருமணம்’ எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)

எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக ரசூல் (ஸல்) கண்டித்தார்கள். அறிவிப்பு அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.’ அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரங்கள் : புகாரி: 1v3, முஸ்லிம்: 2v3231-35, அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா,இப்னு ஜாருத், பைஹகீ,

குறிப்பு : திருமணத்தில் மஹர்தருதல், வலீமாவிருந்து, தனது மனைவிக்குரிய உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள், மணமகன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மணமகளுக்கு இந்த வசதிகளைப் பற்றி பொறுப்பில்லை. எனவே இது மணமகனுக்கு மட்டும் கூறப்படும் நபிமொழியாகும்

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:

‘மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.’ அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.

மணமக்களின் தகுதிகள்

அல்லாஹ் வரையறுக்கின்றான்: (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய (முஃமினான) ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை (முஃமினான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன். (அல்குர்ஆன் 2:221)

‘விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.’ (அல்குர்ஆன் 24:3)

‘பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்’ அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத்.

அன்பு செலுத்தும்;, அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

பெண் பார்த்து நிச்சயித்து மணம் முடியுங்கள்

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள்.’ ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

ஒரு நபித்தோழர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துதான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

‘ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கையில் மற்றொருவர் அப்பெண்ணை மண முடிக்க (நிச்சயம்) பேசக்கூடாது’ என நபி (ஸல்) அவர்களை வலியுறுத்தினார்கள். அறிவிப்பு: அபூஹீரைரா, இப்னு அமர், உக்பா இப்னு அம்மார். ஸம்ரா பின் ஜூன்தும் (ரலி அன்ஹூம்) ஆதாரங்கள்: ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிக், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா..

ரசூல் (ஸல்) அவர்கள் மணமுடித்த ஒரே கன்னிப் பெண்ணான ஆயிஷா (ரலி) அவர்களை அல்லாஹ் கனவில் இருமுறைக் காட்டி உங்களது மனைவியென பிரகடணப்படுத்தினான். அறிவிப்பு: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி.

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் மணமுடித்த அனைத்து மனைவிகளையும் நேரில் பார்த்து அவர்களது முழு சம்மதத்துடனே மணமுடித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை நேரில் கண்டு பின் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணம் முடித்து தரும்படி அலீ (ரலி) அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று நபி (ஸல்) அவர்களும் மணம் முடித்து வைத்தார்கள். ஆதாரம்: இப்னு ஸஃது

ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள்

மணமகன், மணமகளின்றி

மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)
இருநீதமுள்ள சாட்சிகள்
மணமகளின் முழுமையான சம்மதம்
மணமகளின் உரிமையான மஹர் தொகை
நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.

நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி

மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை

ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்:’அயிம்மா’ (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள்.

அதற்கு ரசூல் (ஸல்);: ‘அவளது மௌனமே சம்மதமாகும்’ என்றார்கள்.அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

அல்லாஹ் அறிவுறுத்துகிறான்: ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.’ (அல்குர்ஆன் 4:19)

நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி,

இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்

அல்லாஹ் ஆணையிடுகின்றான்: நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் (ஸல்) அவர்கள் ‘உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்’ என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..

மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்), ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா.

திருமணத்தின் குறிக்கோள்

திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். அறிவிப்பு: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ

குறிப்பு: பசிக்கு உணவு, தாகத்திற்கு நீர், உடல் தேவையான மற்றொரு துணை தேவை என்பது இயற்கையின் நீதியாகும். எனவே பசி, தாகம், மோகத்தை அடக்குவது இயற்கையின் நியதிக்கு விரோதமானதாகும். மேகத்தை அடக்கி மோட்சமடையலாமென வாதிடுவோர், அவர்களது பெற்றோர் அப்படிப்பட்ட மோட்சத்தை நாடியிருந்தால் இவர் பிறந்திருப்பாரா? என்பதை சிந்திக்கவும்.

இஸ்லாம், மோகத்தை நியாயமான (திருமண) வழியில் தீர்த்து அத்துடனே மோட்சத்தை அடைய முடியும் என்பதை கூறும் ஒரே மார்க்கமாகும். நியாயமான வழியில் தீர்க்காமல் மிருகங்களைப் போல தாறுமாறாக வாழ்வதால் இன்று எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் உருவாகியுள்ளதை அறியலாம். இன்று எல்லோரும் உங்கள் துணைவர்ஃதுணைவியர்களிடம் உண்மையாளர்களாக இருங்கள் (Be Faithful to your Spouse) எனக் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருமணத்தின் குறிக்கோளாக இஸ்லாம் இதனை வகுத்துள்ளது.

தடுக்கப்பட்ட திருமண பந்தங்கள்

‘ஷிஹார்’ திருமணம்: ஒருவர் தனது மகளையோ அல்லது சகோதரியையோ மற்றொருவருக்கு மணம் பேசி அவரது மகளையோ அல்லது சகோதரியையோ தனக்கு மணம் பேசி எவ்வித திருமணக்கொடை (மஹ்ரை)யும் குறிப்பிடாமல் திருமணம் செய்வதாகும். (விளக்கம்: அபூதாவூத் எண் 2069)

நிக்காஹ் குத்பா:-

இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹூ வநஸ்தஃ பிருஹூ வனவூது பில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, வமின் ஐஷஆதி அஃமாலி னமன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமனயுழ்லில் ஃபலா ஹாதியலஹூ வ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்;லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹ் யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா என்று நபி (ஸல்) கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

குத்பாவின் பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

ஈமான் கொண்ட விசுவாசிகளே இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிமாகயன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமகுரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்: மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

ஈமான் கொண்ட விசுசாவிகளே சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்;செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்ம் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71)

இல்வாழ்க்கை இன்பகரமானது

அல்லாஹ் அறிவிக்கின்றான்: நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும்: உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளனதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்.(அல்குர்ஆன் 2:187)

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களை அனுபவியுங்கள். (அல்குர்ஆன் 2:223)

பெண்கள் ஆண்மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பொற்குவியல்கள்: அடையாளமிடப்பட்ட (உயர்ந்த குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள். ஆகியவற்றின் மீதுள்ள இச்சைகள் மனிதர்களுக்கு அழகாகப்பட்டுள்ளது. இவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமிருக்கிறது. (அல்குர்ஆன் 3:14)

நபி (ஸல்) தெளிவாக்கினார்கள்: இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல (ஒழுக்கமான) மனைவியை அடைவதாகும். அறிவிப்பு: இப்னு உமர் (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

நற்குணமுள்ளவர்கள் இறை நம்பிக்கையில் (ஈமானில்) முழுமையானவர்கள். தனது மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவர்கள் உண்மையில் நற்குணமுள்ளவர்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

கணவனின் கடமைகள்

மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் உண்ணும்போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும் போது அவளையும் அணியச் செய்வதும், அவளது முகத்தில் அறையாதிருப்பதும், அவளை (தீய சொற்களால்) இழிவு படுத்தாதிருப்பதும், வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளைக் கண்டிக்காதிருப்பதும் (கணவனின் கடமை) என்று நபி (ஸல்) அறிவுறுத்தினார்கள். அறிவிப்பு: முஆவியா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், இப்னுமாஜர், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

ஒருவன் தனது குடும்பத்திற்காக செய்யும் அனைத்து செலவுகளும் அல்லாஹ்விடம் (நன்மைகளாக) கணக்கிடப்படுகிறது. அவை அவன் செய்யும் தானந் தர்மமாகிறது. அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் அல்-பத்ரி (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தனது செல்வத்தை அடிமையை விடுவிப்பதற்காகவும், ஏழைகளுக்கு தர்மமாகவும், அனாதைகளுக்கு உதவியாகவும், தனது மனைவி, மக்களை செம்மையாக வைத்திருக்கவும் செலவு செய்கிறார். இவற்றில் தனது மனைவி மக்களுக்கு செலவிட்டதே அனைத்து செயல்களிலும் மேலானதாகும். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி)
ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

பெண்கள் வளைந்த எலும்பால் படைக்கப்பட்டவர்கள் அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய் அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், புகாரி.

ஒரு இறைநம்பிக்கையுடைய ஆண், இறைநம்பிக்கையுடைய தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால், அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

பெண்களை நல்லமுறையில் நடத்துங்கள், அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா.

தவறு செய்யும் மனைவியை வீட்டிலன்றி (வெளியிடங்களில் பலரறிய) கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: முஆவியத்துல் ஷீரி (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்.

மனைவியின் கடமைகள்

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்’ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நபின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆதாரங்கள்: தப்ரானி, முஸ்னத் அஹ்மத்.

கணவன் தாம்பத்யத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், வானவர்கள் விடியும் வரை அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், புகாரி, அபூதாவூத், தாரமி,

ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா

அனைவருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை

அல்லாஹ் கூறுகிறான்:(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)

அழகிய அறிவுரைகள்:- அல்லாஹ் அறிவிக்கிறான் செல்வமும், பிள்ளைகளும், இவ்வுலக வாழ்வின் அலங்காரங்களாகும், என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவை நற்கருமங்களே! உம்முடைய இறைவனிடம் நன்மை பயப்பனவாகவும் (அவனிடம்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)

ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவி கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி

வலிமா விருந்து

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதினாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான்பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் ஒரு அன்சாரி பெண்ணை மணம் முடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தொழுகைக்கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள்.

குறிப்பு: இந்த ஹதீஸில் வரும் ‘சுஃப்ரத்’ எனும் வார்த்தைக்கு ‘மஞ்சள் நிறம்’, ‘சந்தன நிறம்’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது. ஆயினும் இது ஒரு வாசனை பொருளின் நிறமே தவிர மளிகை பொருளான மஞ்சளோ, சந்தனமோ அல்ல என்பதும், பல நிறத்தில் இருக்கும் வாசனைப் பொருள்களைப் போல் இந்த நபித்தோழர் இங்கு மஞ்சள் நிற வாசனைப் பொருளை பயன்படுத்தி உள்ளார் என்பதை தவிர மஞ்சள் அல்லது சந்தனமோ (புனிதமானதாக) பயன்படுத்த இது ஆதாரம் அல்ல என்பதும், பொதுவாக வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவதையே இது குறிக்கிறது என்பதைக் கவனிக்கவும்.

ரசூல் (ஸல்) எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என வினவினார்கள். இப்னு அவஃப் (ரலி) ஒரு பேரித்தம் பழமளவு தங்கம்! என பதிலளித்தார்கள்.ரசூல் (ஸல்) ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக என்றார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, புகாரி, முஸ்லிம், அபூதாவூத்..

கவனிக்க: சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நபி தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை, உபதேசங்களையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களின் கவனத்;திற்கு கொண்டு வந்தனர். ஆனால் அன்று மதீனாவில் பெறும் செல்வந்தராக திகழ்ந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என நபி (ஸல்) அவர்களும் கேட்கவில்லை. காரணம் பெரும் படோபத்துடன் பலரை அழைத்து பணத்தை விரயம் செய்து திருமணத்தை நடத்துவது இஸ்லாமிய நெறி அல்ல என நபி (ஸல்) கற்று தந்திருந்தார்கள். அதன்படி சிக்கனமாக சிறப்பாக அன்று வாழ்ந்த பெரும்செல்வந்தர் அப்துர்ரஹ்மான் பின அவ்ஃப் (ரலி) தனது திருமணத்தை முடித்தார்கள். அதனை சரி கண்ட ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா (விருந்து) தர ஆணையிட்டார்கள். (ஆடம்பரமாக திருமணம் நடத்துபவர்கள் இதனை கவனிக்கவும்).

நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:’நீங்கள் வலீமா வீருந்துக்கு அழைக்கபடுவீர்களேயானால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.’ அறிவிப்பு: முஅத்தா மாலிக், ஆதாரம்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: எந்த ‘வலீமா’ விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர். அறிவிப்பு: அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஅக்தா மாலிகி.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து ‘ 750 கிராம் ஆகும்) அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்து ஷைபா (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்.

மணமகள் வீட்டு சீதனம்

நபி (ஸல்) அவர்களுக்கு ஜைனப், ருகையா, உம்முகுல்தும், ஃபாத்திமா (ரலி) என்ற நான்கு பெண் மக்களிருந்தனர். இவர்களில் ருகையா அவர்களை உஸ்மான் (ரலி) முதலில் மணமுடித்தர்கள். பத்ருபோரின் போது ருகையா (ரலி) அவர்கள் நோயால் இறந்து விடவே, நபி (ஸல்) அவர்களது தனது அடுத்த மகளான உம்முகுல்தும் (ரலி) அவர்களை மணமுடித்து வைத்தார்கள். இவ்விரு திருமணங்களிலும் செல்வந்தரான உஸ்மான் (ரலி) அவர்களை மருமகனாகப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் எந்த சீர்வரிசைகளையும், சீதனங்களையும் தனது மக்களுடன் மாப்பிள்ளை உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டுக்கு அனுப்பியதாக, அதிகாரபூர்வமாக ஆதாரங்களைப் பார்க்க முடியவில்லை.

குறிப்பு: ஆனால் சீர்வரிசைகள் வரதட்சனை வாங்க இஸ்லாத்தில் அறவே இடமில்லை.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

… பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்…

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

(பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு ‘புலனுக்கெட்டாத இறை அருள்’ என்பது பொருள்.

குறிப்பு: மேற்கண்ட இந்த துவாவை நாம் அனைவரும் மணமக்களுக்காக ஒதுவது தான் நபிவழி. சுன்னத் அதற்கு மாறாக, நாம் வேறுவிதத்தில் வாழ்த்துவது, மேற்கண்ட துவாவை புறக்கணிப்பதுடன் ஒரு நபி வழியை ஒரு சுன்னத்தையும் புறக்கணித்துவிடும் விதமாக, நம்மை ஒரு நூதனத்தை நடைமுறை படுத்தியவராக்கி விடும் என்பதை கவனிக்கவும்.

முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.

குறிப்பு: ஆதலால் நாம் மேற்படி துவாவை ஒதி நபி வழிபடி செயல்படுவது நம்மை நரகத்திலிருந்து காக்கும் ஒரு சிலரிடம் மட்டும் நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹூமா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.

சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.

மணமக்களின் பிரார்த்தனை (துஆ)

لئن أتيتنا صالحا لنكو نن من الشاكرين ( الأعراف : أيه 189 ) .

‘லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்’ (7:189)

எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)

(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)

رب هب لى من لدنك ذرية طيبة إنك

أنت السميع الدعاء ( ال عمران : آيه 38 ) .

‘ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ’

இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)

(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

மணமகனின் பிரார்த்தனை (துஆ)

ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين

واجعلنا للمتقين إماما ( الفرقان : آيه 74 ) .

‘ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா’

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (அல்குர்ஆன் 25:74)

(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)

ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:

اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه

وأعوذ بك من شرها وشر ما جبلت عليه .

‘அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி’ என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.

பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்

இல்லறத்தின் ஒழுங்குகள்

ஒருவர்தம் மனைவியுடன் கூடும்போது

بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان مارزقتنا

‘பிஸ்மில்லாஹி அல்லாஹூம்ம ஜன்னிப்னஷ் ஷைதான வஜன்னிப்ஷ்ஷைதான மா ரஸக்தனா’ என்று கூறுவாரானால் – அப்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஷைத்தானால் எந்த தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

பொருள்: இறைவா! எங்களையும் எங்களுக்கு நீ வழங்கக்கூடிய குழந்தைகளையும் ஷைத்தானை விட்டும் நீ பாதுகாப்பாயாக! ஆதாரங்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா, புகாரி, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால், தொழுகைக்குச் செய்வதுபோல் ஒளு செய்து கொள்வார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்.

தன் மனைவியுடன் கூடிவிட்டு அவளது அந்தரங்கத்தை வெளியில் சொல்லித் திரிபவன் கியாமத் நாளில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவனாவான் என நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), ஆதாரங்கள்: முஸ்லிம், அஹ்மத்

திருமண அநாச்சாரங்களை விட்டொழிப்போம்

மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு ரசம் (நலங்கிடல்) என்ற பெயரில் எண்ணெய் சடங்கு செய்தல்.
கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல், ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
மேடை அலங்காரம், வீடியோ, மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.
பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
மணமகனை பைத்ப்பாடி ஊர்வலமாக அழைத்து செல்வது.
மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால்:

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள், எவர்கள் மற்றொரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களே அவர்கள், அந்த சமுதாயத்தில் சேர்ந்தவராவர்கள். என்னைச் சார்ந்தவர்களல்ல. அறிவிப்பு: இப்து உமர் (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்.

குறிப்பு: இங்கு கருணை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மற்ற சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள் என்று கூறுவது எந்த ஒரு சமுதாயத்தின் மீது உள்ள குரோதமோ, வெறுப்பினாலோ அல்ல என்பதையும், அப்படி செய்வது மனித யூகங்கள் கலந்த, இறைவனின் முழு அங்கீகாரம் அல்லாத ஒரு கலாச்சார செயலாக இருக்குமே அல்லாமல், இறைவனால் அளிக்கப்பட்ட எளிமையான, சீரான, ஒழுக்கமான ஒரு மார்க்கத்தின் கலாச்சாரமாக இருக்காத காரணத்தினால் இறை வெறுப்பும், தண்டைனையும் பெற வைக்கும் என்பதனாலேயே என்பதை உணரவும் மனித குலத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் இறைவன் மனிதர்களிடம் எதை விரும்புகிறானோ அதைத் காட்டி தரவே முஹம்மது (ஸல்) மூலம் அல்லாஹ் அவ்வாறு கூற வைத்துள்ளான் என்பதும் ஒரு காரணமாகலாம்.

நன்றி : www.a1realism.com

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்

Monday, February 13, 2012

தொடரும் முஸ்லிம்பென்களின் ஓட்டம்..! இப்போதே இதற்கு முடிவுகட்டியாக வேண்டும்..!!


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?
அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?
அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?
அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?
ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:
ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!
இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக் கொடுக்கும் ஈனத்தன மில்லையா இது?. அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.
எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?
கலாசாரச் சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?
பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?
எழுதிவிட்டேன் பலதடவை
முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.
சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall 
http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...
ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் ‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.
அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.
“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.
கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?
தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:
தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள்,இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)
அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.
இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரசிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.


நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.